உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் அதன்மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார ரீதியாகக் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளக் கூடும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் நடைபெற்ற இரண்டு மணிநேர இணையவழி சந்திப்பின் போதே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த கடுமையான நடவடிக்கையின் ஒரு பகுதியாக ரஷ்யாவின் மிகப் பெரிய வங்கி குறிவைக்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், நேட்டோ படைகள், கிழக்கு நோக்கிச் செல்வதைத் தவிர்க்கும் உத்தரவாதத்தை வழங்குமாறு பைடனைக் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், தற்காப்பு ஏவுகணை முறைகள் ரஷ்யாவுக்கு அருகில் உள்ள நாடுகளில் வைக்கப்படமாட்டாது எனும் உத்தரவாதத்தையும் வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
அந்த விவகாரங்கள் குறித்து இருநாட்டுப் பிரதிநிதிகள் மேலும் கலந்தாலோசிக்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.