கல்முனை மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம், 15 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையின் வரவு- செலவுத் திட்டத்திற்கான விசேட சபை அமர்வு நேற்று (புதன்கிழமை) மாலை, மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகையிலுள்ள கல்முனை மாநகர சபையின் மொத்த உறுப்பினர்கள் 41 பேரில் 2 ஆசனங்கள் வெற்றிடமாக உள்ள நிலையில் 32 உறுப்பினர்கள் இந்த அமர்வுக்கு சமூகமளித்திருந்தனர்.
இவர்களில் 21 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 6 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். 5 உறுப்பினர்கள் நடுநிலை வகித்திருந்தனர். 7 உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை.
ஆளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் 12 உறுப்பினர்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 4 உறுப்பினர்கள், சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவின் 3 உறுப்பினர்கள், ஹெலிகொப்டர் சுயேட்சைக் குழுவின் ஒரு உறுப்பினர் மற்றும் மான் சுயேட்சைக்குழு உறுப்பினர் ஒருவருமாக 21 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் 3 உறுப்பினர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 2 உறுப்பினர்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஒரு உறுப்பினரும் எதிராக வாக்களித்தனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 4 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு உறுப்பினரும் நடுநிலை வகித்திருந்தனர்.
சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவின் 5 உறுப்பினர்களும் தேசிய காங்கிரஸின் ஒரு உறுப்பினரும் சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர், வாக்கெடுப்பின்போது சபையில் இருக்கவில்லை.
குறித்த வரவு- செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப், பட்ஜெட் நிறைவேற ஒத்துழைப்பு வழங்கிய உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் உறுப்பினர்கள் பலரும் மாநகர முதல்வருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.