துப்பாக்கி முனையில் தமிழ் அரசியல் கைதிகள் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் குறித்து இதுவரை 18 பேரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அத்துமீறி நுழைந்த விவகாரம் குறித்து கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிலருக்கு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக குற்றவியல் சட்டக் கோவையின் கீழ், விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு கடந்த ஒக்டோபர் 21 ஆம் திகதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கமைய, விசாரணைகளை முன்னெடுத்த கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு, இதுவரை அனுராதபுரம் சிறையில் உள்ள இரு கைதிகள், 7 சிறை அதிகாரிகள் மற்றும் வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 9 சிறைக் கைதிகளிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளது.