அரச துறை நிறுவனங்களுக்கான வினைத்திறனான சேவையை மதிப்பிடும் பொருட்டு தேசிய உற்பத்தித் திறன் செயலகத்தால் 2018/2019ம் ஆண்டினை தழுவி நடாத்தப்பட்ட 2020ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் போட்டித் தொடரில் தேசிய ரீதியில் யாழ் மாவட்ட செயலகம் முதலாம் இடத்தைப் பெற்றிருப்பதுடன், அரச துறையில் பிரதேச செயலகங்களுக்கு இடையிலான போட்டித் தொடரில் பங்குகொண்ட 14 பிரதேச செயலகங்களும் வெற்றி பெற்றுள்ளது.
அந்த வகையில் தெல்லிப்பளை பிரதேச செயலகம் முதலாம் இடத்தினையும் யாழ்ப்பாணம், தென்மராட்சி, பருத்தித்துறை பிரதேச செயலகங்கள் இரண்டாம் இடத்தினையும் சண்டிலிப்பாய், கோப்பாய், கரவெட்டி மற்றும் மருதங்கேணி பிரதேச செயலகங்கள் மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளது.
மேலும்,உடுவில், காரைநகர், சங்கானை, ஊர்காவற்றுறை மற்றும் வேலணை பிரதேச செயலகங்கள் சிறப்பு மெச்சுரை விருதினையும் நெடுந்தீவு பிரதேச செயலகம் மெச்சுரை விருதினையும் பெற்றுள்ளது.
அந்தவகையில் யாழ் மாவட்ட செயலகம் தேசிய ரீதியாக மாவட்ட தரப்படுத்தலில் முதலிடம் பெற்றிருப்பதுடன் பங்குபற்றிய 14 பிரதேச செயலகங்களும் பொதுமக்கள் சேவை வழங்கலில் சிறந்த அங்கீகாரத்திற்கான அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், இவ்வெற்றியானது யாழ் மாவட்டம் முழுவதுமான நிர்வாக ரீதியாக கிடைத்த சிறந்த அங்கீகாரம் ஆகும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இது ஒரு பொது மக்கள் சேவை வழங்கலில் உத்வேகம் மற்றும் ஊக்கத்தை மாவட்ட ரீதியாக எடுத்துக்காட்டுவதுடன், எதிர்காலத்திலும் வினைத்திறன் மற்றும் விளைதிறனான பொதுமக்கள் திருப்தியுரும் வகையில் சேவை வழங்கலில் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் வலுப்பெறும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும், இவ்விருதினை பெற்றுக்கொள்ள முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய மாவட்ட மற்றும் பிரதேச செயலக அனைத்து உத்தியோகத்தர்களும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளதுடன், இச்செயற்பாட்டிற்கான பலமான உற்பத்தித் திறன் கட்டமைப்பினை வடிவமைத்து வழிகாட்டல்களை அவ்வப்போது வழங்கியிருந்த உற்பத்தித்திறன் குழுவினருக்கு விசேட நன்றிகளையும் பாராட்டுக்களையும் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இவ் போட்டித் தொடரில் கடந்த 2016ஆம் ஆண்டில் 3ம் இடத்தையும் 2018ஆம் ஆண்டில் 2ம் இடத்தையும் பெற்று அரச அலுவலகங்களுக்கு முன்மாதிரியான தனித்துவமான மாவட்டமாக யாழ்மாவட்டம் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.