2020ஆம் ஆண்டு குளிர்காலத்தின் போது, பிரித்தானியா மருத்துவ மனைகளில், கொவிட் தொற்றால் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சத்தைக் கடந்து சென்றதனைப் போலான ஒரு நிலையை தவிர்ப்பதற்கு, நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில், எதிர்வரும் 18ஆம் திகதிக்குள் கடுமையான தேசிய நடவடிக்கைகள் விதிக்கப்பட வேண்டும் என பிரிட்டனின் உயர்மட்ட பொது சுகாதார அதிகாரிகள் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய ஓமிக்ரோன் மாறுபாடு டெல்டாவை விட குறைவான தீவிரமான நோய்க்கு வழிவகுத்தாலும், நாளொன்றிற்கு 5,000 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை ஏற்பட்டால், அது NHS-ஐ கடுமையான பாதிப்பிற்கு உட்படுத்தும் என கடந்த செவ்வாயன்று UK Health and Security Agency (UKHSA) யிடமிருந்து, சுகாதார செயலாளர் சஜித் ஜாவிட் ஒரு அறிவுறத்தலைப் பெற்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தற்போது கூறப்படுகின்ற பாதிப்பு, தெரிவிக்கப்பட்டுள்ள மொத்த எண்ணிக்கையை விட இரு மடங்காக இருக்கலாம் என, தொற்றுநோயியல் நிபுணர் பேராசிரியர் நீல் பெர்குசன் கார்டியனுக்கு கூறினார்.
இந்த வாரம் பிரித்தானியாவில் பிளான் B நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்ட பின்னர் மேலும் நடவடிக்கைகளைக் கொண்டுவருவதற்கான உடனடித் திட்டங்கள் எதுவும் இல்லை என பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆனால் நேற்றைய தினம்( வெள்ளிக்கிழமை) கோப்ரா கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய கபினட் அமைச்சர் மைக்கேல் கோவ், பரவலின் வேகம் குறித்து அரசாங்கத்திற்கு மிகவும் சவாலான சில தகவல்கள் கிடைக்கப்பெற்றுளதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் UKHSA வில் இருந்து ஜாவிடுக்கு கிடைக்கப்பெற்ற அறிவுரையை தி கார்டியன் பார்த்ததாகவும், நிலவுகின்ற பல்வேறு சூழ்நிலைகளின் கீழ், பரவலின் வேகம் இரட்டிப்பாக நேரிட்டால், 2021 டிசம்பர் 18 அல்லது அதற்கு முன் கடுமையான நடவடிக்கை தேவை என குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.