கட்டாய தடுப்பூசி திட்டம் உட்பட அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஒஸ்திரியாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வார இறுதி ஆர்ப்பாட்டங்களின் ஒருபகுதியாக தொடர்ந்து நான்காவது வாரமாக தலைநகர் வியன்னாவில் சுமார் 44,000 பேர் திரண்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.
நாடளாவிய ரீதியில் தடுப்பூசி செலுத்தப்பட்டபோதும் மேற்கு ஐரோப்பிய நாடான ஒஸ்திரியாவில் கடந்த மாதம் மீண்டும் முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டன.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த கட்டுப்பாடுகள் நிறைவுக்கு வரும் நிலையில் தடுப்பூசி போடாதவர்களுக்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த பெப்ரவரி முதல் கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்குவதற்கான அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக எதிர்கட்சிகளுடன் ஒன்றிணைந்து மக்கள் போராடி வருகின்றனர்.
தடுப்பூசி போட வேண்டுமா என்பதை தாங்களாகவே தீர்மானிக்கும் சுதந்திரம் மக்களுக்கு இருக்க வேண்டும் என்ற கோஷத்தை முன்வைத்து போராட்டங்கள் இடம்பெறுகின்றன.
எவருக்கும் வலுக்கட்டாயமாக தடுப்பூசி போடப்பட மாட்டாது என அரசாங்கம் கூறினாலும் அதை மறுப்பவர்களுக்கு 4,000 டொலர் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.