UPDATE அண்மையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட லிட்ரோ எரிவாயுவில் உரிய செறிமானம் இல்லாதமையினால் அதனை திருப்பி அனுப்ப அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லிட்ரோ சமையல் எரிவாயுவினால் கப்பல் ஊடாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட புதிய செறிமானம் அடங்கிய எரிவாயுவின் தரம் குறித்து இன்று அறிவிக்கவுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகார சபை மற்றும் நிறுவனங்களுடனான இன்றைய சந்திப்பை அடுத்து இது குறித்து அறிவிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
குறித்த எரிவாயு கப்பலில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அறிக்கைகள் இன்று காலையே கிடைக்கும் என்றும் அதன் பின்னரே குறித்த எரிவாயு தரமானதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என கூறினார்.
குறித்த கப்பலில் அடங்கியுள்ள எரிவாயு தரம் குறைந்ததாயின் அதனை மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.
இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் சமையல் எரிவாயுவில், மணத்தை அறிந்துகொள்ளும் பதார்த்தமான, எ(த்)தில் மேகெப்டனின் அளவு, 14 க்கும் 15க்கும் இடையில் இருக்க வேண்டும் என்ற போதிலும், அதற்கும் குறைந்த மட்டத்திலேயே அது இருப்பதாக தெரியவந்துள்ளது.
அதேநேரம், ப்ரொப்பேன் மற்றும் பியூட்டேன் விகிதங்கள் 29 க்கு 69 என்ற அடிப்படையில் இருப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுயாதீன நிறுவனத்தின் பரிசீலனையின்படி, இந்த எரிவாயுவில் 33 சதவீத ப்ரொப்பேன் அடங்கியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
லிட்ரோ நிறுவனத்தினால் நேற்று முன்தினம் 3,700 மெற்றிக் டொன் அடங்கிய எரிவாயு கப்பல் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்து, அதிகாரிகள் அந்த எரிவாயுவின் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.