சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
நாளை (புதன்கிழமை) காணொளி முறையில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பொன்றின் போது, இருதரப்பு உறவுகள், சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதிக்கவுள்ளனர்.
உக்ரைன் எல்லையில் ஏராளமான இராணுவ வீரர்களை ரஷ்யா குவித்துள்ளதையடுத்து, அந்த நாட்டுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த உச்சிமாநாடு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், ‘பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவு, ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை மேற்கொள்வர்’ என கூறினார்.
சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியலில் அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு பதிலடி தரும் வகையில் சீனாவும் ரஷ்யாவும் தங்களது வெளியுறவுக் கொள்கைகளில் அண்மைக்காலமாக மாற்றங்களைச் செய்து வருகின்ற நிலையில் இந்த சந்திப்பு இடம்பெறுகின்றது.
ரஷ்யாவை போலவே சீனாவும் தனது உள்நாட்டு கொள்கைகள் காரணமாக அமெரிக்காவால் பொருளாதார தடைகளைச் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.