இலங்கையர்கள் 15 பேருக்கு எதிராக தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்குப் புத்துயிர் அளிக்க முயன்றதாக தெரிவித்து, இந்திய தேசியப் புலனாய்வு முகவரகம் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
இந்தியாவுக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தியமை தொடர்பாக கைது செய்யப்பட்ட 15 பேருக்கு எதிராகவே இவ்வாறு குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்த கூட்டங்களில் இவர்கள் கலந்துகொண்டதாகவும் இந்தியாவிலும் இலங்கையிலும் அதன் செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்றதாகவும் இலங்கைக்கு எதிராகப் போரில் ஈடுபட்டதாகவும் சிலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் இரு நாடுகளிலும் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் பயங்கரவாத செயல்களை புரிய தயார்படுத்துவதற்கும் நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய புலனாய்வு முகவரகம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, சென்னையில் அகதியாக வசித்து வந்த மற்றொரு பிரதிவாதியான சற்குணம் இலங்கையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பாதுகாப்புப் படையில் உறுப்பினராக இருந்ததாகவும் அம்முகவரகம் தெரிவித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் இந்த கடந்த மார்ச் 25ஆம் திகதி அரபிக்கடலில் மீன்பிடிக் கப்பலில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
இதன்போது, அவர்களிடமிருந்து போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.