அவுஸ்ரேலியாவில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற விபத்தில், ஐந்து சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டாஸ்மேனியாவின் டெவன்போர்ட்டில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலையில் இந்த விபத்து ஏற்பட்டது. சிறுவர்கள் 10மீ (32 அடி) உயரத்தில் இருந்து கீழே விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களில் இரண்டு ஆண் சிறுவர்களும் இரண்டு பெண் சிறுவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவர்கள் ஆறாம் வகுப்பில் கல்வி கற்கின்றனர். அதாவது அவர்களுக்கு 10 அல்லது 11 வயது இருக்கலாம்.
கல்வி ஆண்டின் கடைசி நாள் என்ற வகையில் ‘ஃபன் டே’ என்ற பெயரில் வேடிக்கை நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த கொண்டாட்டத்தில் பாடசாலை மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ‘துள்ளல் கோட்டை’ என்று அழைக்கப்படுகிற பிரமாண்ட பலூன் போன்று ஊதப்பட்ட ஒரு கோட்டை அமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. இதில் ஏறி குழந்தைகள் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது சற்றும் எதிர்பாராத விதத்தில் காற்று மிக வேகமாக வீசியது. இந்த காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அந்த ‘துள்ளல் கோட்டை’ வெடித்து விபத்துக்குள்ளானது.
இந்த துயர சம்பவத்துக்கு அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மோரிஸன் அனுதாபம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
‘இந்த விபத்து நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு நெஞ்சை நொறுக்குவதாக அமைந்துள்ளது. சிறு சிறுவர்கள் ஒரு வேடிக்கையான நாளில் கொண்டாட்டத்தில் இருந்தபோது, இப்படி ஒரு சம்பவம் நடந்து சோகமாக மாற்றி விட்டது’ என கூறினார்.