வவுனியா பறண்நட்டகல் பகுதியில் தனி நபர் ஒருவர் 500 ஏக்கர் அரச காணியினை அத்துமீறி அபகரித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஏ9 வீதியில் பறண்நட்டகல் சந்தியில் மழையினையும் பொருட்படுத்தாமல் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் “எமது கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான 500 ஏக்கர் காணியினை தனிநபர் ஒருவர் அபகரிக்கும் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றார்.
பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருக்கு தெரியப்படுத்தியும் எமக்கு எந்தவிதமான தீர்வும் கிடைக்கப்பெறவில்லை.
எமது கிராமத்தில் 500ற்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் வசித்துவரும் நிலையில் 200ற்கும் மேற்பட்ட உபகுடும்பங்களுக்கு காணிகள் இல்லாத நிலை காணப்படுகின்றது.
எனவே அந்த காணியினை மீட்டு காணியற்று இருக்கும் எமது கிராமத்தைச் சேர்ந்த உப குடும்பங்களுக்கு வழங்குமாறு உரிய அதிகாரிகளை நாம் வேண்டி நிற்கின்றோம்” என தெரிவித்தனர்.
இந்த நிலையில், குறித்த பகுதிக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், கு.திலீபன் மற்றும் வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன், ஆகியோர் பொதுமக்களுடன் கலந்துரையாடியிருந்ததுடன் ஆக்கிரமிக்கப்படும் பகுதியினையும் பார்வையிட்டனர்.