தங்கள் குழந்தைகளுக்கு கொரோனா வைரஸுக்கு எதிராக, தடுப்பூசி போடுமாறு பெற்றோருக்கு இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்ரேலில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை 150யைக் கடந்துள்ள நிலையில், பிரதமரின் இந்த செய்தி வந்துள்ளது.
நாட்டு மக்களிடம் தொலைக்காட்சியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உரையாற்றிய பிரதமர் நப்தாலி பென்னட்,
‘இஸ்ரேலில் கொரோனா வைரஸ் பரவலின் ஐந்தாவது அலை தொடங்கி உள்ளது. குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் வீதம் குறைந்து காணப்படுகிறது. குழந்தைகளுக்கான தடுப்பூசி பாதுகாப்பானது.
வேகமாகப் பரவி வரும் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றில் இருந்து காப்பாற்ற ஒவ்வொரு பெற்றோரும் அவர்களது குழந்தைகளுக்கு கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும்’ என கூறினார்.
இஸ்ரேல் கடந்த மாதம், 5 முதல் 12 வயது வரையிலான இளைய குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை வழங்கத் தொடங்கியது, ஆனால் அந்த வயதினரின் தடுப்பூசி வீதம் ஏமாற்றமளிக்கும் வகையில் குறைவாக இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.