வடக்கு மற்றும் கிழக்கில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சீனா முன்னெடுக்கும் செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யவேண்டும் என பாத்மநாபா மன்றத்தின் தலைவரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.
வடகிழக்கு தமிழர்கள் இந்தியா மீது வைத்திருக்கும் நம்பிக்கையினை குழப்புவதற்காகவே சீனாவின் இந்த செயற்பாடு அமைவதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “குறிப்பிட்ட காலமாக யாழ். குடா நாட்டிலும் வடகிழக்கிலும் முன்னெடுக்கப்படும் இராஜதந்திர செயற்பாடுகளின் அடிப்படையில் வடக்கினை சீனாவுக்கு தாரைவார்த்துவிட்டது போன்று உள்ளது. வடக்கில் சீனாவின் மேலாதிக்கம் தொடர்ந்து வருகின்றது.
இலங்கை அரசாங்கம் பொருளாதார ரீதியாக வலுவடைவதற்காக யாழ். குடாவில் இந்தியாவுக்கு ஆபத்தாக வரக்கூடிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றதா என்கின்ற சந்தேகம் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் உருவாகியுள்ளன.
கடந்தவாரம்கூட சீனாவின் தூதுவர்கள் யாழ். குடாவில் இந்தியாவின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய கேந்திர நிலையத்திற்கு சென்ற விடயம் என்பது இலங்கை ஊடாக இந்தியாவுக்கு செய்தி ஏதும் வழங்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இலங்கை அரசாங்கம் அயல்நாடுகளுக்கு அச்சுறுத்தலையும் பாதுகாப்பு நெருக்கடியையும் ஏற்படுத்தக்கூடிய இராஜதந்திர செயற்பாடுகள் எதனையும் முன்னெடுக்கின்றதா என்ற சந்தேகம் வடகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
வரலாற்று ரீதியாக வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு ஒரு இறையான்மையுள்ளது. வடகிழக்கு பூர்வீகமாக தமிழர்கள் வாழும் பிரதேசம். தனியான கலைகலாசார விழுமியங்களை கொண்ட பகுதி. இந்த கலை கலாசார விழுமியங்களுடன் இந்தியா அங்குள்ள தமிழ் நாட்டுடன் உள்ள உறவு, தமிழர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தக்கூடிய செயற்பாடுகள் என பல விடயங்களில் வடகிழக்கு தமிழர்கள் இந்தியா மீது கடந்த காலத்தில் கரிசனை காட்டியுள்ளார்கள், எதிர்காலத்தில் காட்டுவார்கள், காட்டக்கூடிய சூழ்நிலையுள்ளது.
இந்த சூழ்நிலையினை குழப்புவதற்காக சீனாவின் ஆதிக்கத்தை கொண்டுவருவதை இலங்கை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யவேண்டும். அதுவே ஆரோக்கியமான செயற்பாடு.
இலங்கை அரசாங்கம் தனது பொருளாதார நலனுக்காக வடகிழக்கினை சீனாவுக்கு தாரைவார்த்துக்கொடுப்பது என்பதும் தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடியவாறும் அயல்நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடியவாறும் இலங்கை அரசாங்கம் செயற்படுவதை வன்மையாக கண்டிக்கின்றேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.