இலங்கை பௌத்த சங்கம் தலாய் லாமாவின் ‘மகா சதிபத்தான சுத்தா’ பற்றிய போதனைகளை நடத்தியுள்ளது.
இலங்கை, தாய்லாந்து, மியன்மார், இந்தோனேஷியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலுள்ள மகா சங்கத்தினருக்கு, இலங்கை திபெத்திய புத்த சகோதரத்துவச் சங்கம், மெய்நிகர் வழியில் மஹா சதிபத்தான சூத்திரம் பற்றிய போதனைகளை ஏற்பாடு செய்திருந்தது.
இலங்கை திபெத்திய பௌத்த சகோதரத்துவ சங்கத்தின் தலைவரும், சர்வதேச பௌத்த சம்மேளனத்தின் பிரதிச் செயலாளருமான கலாநிதி தமிந்த புரோனகே இதனை உறுதி செய்துள்ளார்.
இலங்கை நேரப்படி கடந்த 17ஆம் மற்றும் 18ஆம் திகதிகளில் காலை 8 மணி முதல் 9.30 மணி வரை மெய்நிகர் வழியில் தலாய் லாமாவின் புனித போதனைகள் நடாத்தப்பட்டன என்பதை மகிழ்ச்சியுடன் உங்களுக்கு தெரிவிக்கின்றேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசியான் தம்மதுட்ட செயற்றிட்டத்தில், இலங்கை திபெத்திய பௌத்த சகோதரத்துவ சங்கம், தாய்லாந்து, திபெத்திய புத்த மையம், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவின் புத்ததாச இந்தபன்னோ ஆவணக் காப்பகம் , தாய்லாந்தின் சுவான் மொங் பாங்கொக், இந்தோனேசியாவின் ஸ்ரீவிஜயா மாநில பௌத்தக் கல்லூரி ஆஃப் டாங்கராங், மற்றும் மலேசியாவின் தேரவாடா புத்த கவுன்சில் ஆகியவை இணை அமைப்பாளர்களாக உள்ளன.
கலாநிதி வஸ்கடுவ மகிந்தவன்ச மகாநாயக்க தேரர், கலாநிதி ஒமல்பே சோபித நாயக்க தேரர், பேராசிரியர் பல்லேகந்தே இரத்தினசார அநுநாயக்க தேரர், மாதம்பகம அசாஜி அனுநாயக்க தேரர், நாரம்பனாவே ஆனந்த நாயக்க தேரர் உள்ளிட்ட இலங்கையைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட தேரர்கள் குறித்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
மஹாசதிபத்தான சுத்தம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான சிறந்த சொற்பொழிவு என்பதோடு கௌதம புத்தரின் மிக முக்கியமான சொற்பொழிவுகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.