மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் பல்வேறு வேண்டத்தகாத செயற்பாடுகளை தடுக்க முடியாமைக்கு காரணம் பொலிஸார் தொடக்கம் கிராம சேவையாளர்கள் வரையில் இலஞ்சம் பெறும் சம்பவங்கள் நடைபெறுவதாகும் என மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
2022ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் ஊடாக கிராமிய பொருளாதாரத்தின் ஊடாக உணவுப்பாதுகாப்பு என்னும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் கிராமிய உற்பத்தி திட்டம் தொடர்பில் ஆராயும் வகையில் இந்த அபிவிருத்திக்கூட்டம் நடாத்தப்பட்டது.
களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்னத்தின் ஒழுங்குபடுத்தலில் நடாத்தப்பட்ட இந்த கூட்டத்தில் பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பா.சந்திரகுமார், உதவி திட்டமிடல் பணிப்பாளர் நிர்மல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட 46 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டது.
குறிப்பாக எதிர்வரும் ஜனவரி மாதம் நிறைவடைவதற்குள் கிராமிய உற்பத்தி தொடர்பான அனைத்து திட்டங்களையும் அரசாங்கத்திற்கு வழங்கும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரினால் இங்கு அறிவுறுத்தப்பட்டது.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “இன்று எமது பெண் பிள்ளைகள் மிகமோசமாக பாதிக்கப்படுகின்றனர், சுரண்டப்படுகின்றனர், பிழையான வழிகளுக்கு இழுத்துச்செல்லப்படுகின்றார்கள். இதுமிகப்பெரும் தாக்கத்தினை இன்று செலுத்தியுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கைகளை அவதானிக்கும்போது பல விடயங்கள் தெரியவந்துள்ளது. சட்ட ரீதியாக பிள்ளைகளை தத்துக்கொடுக்கின்ற நிலைமைகள் அதிகளவில் நடைபெற்று வருகின்றது.
அதேபோன்று வறுமை காரணமாக பல்வேறு சீரழிவுகள் நடைபெறுகின்றது. நாங்கள் உத்தியோகத்தர்களாக இருக்கின்ற கிராமத்தில் இவையெல்லாம் ஏன் நடைபெறுகின்றது என அரசாங்க உத்தியோகத்தர்கள் சிந்திக்கவேண்டும்.
இதன்ஒரு கட்டமே மட்டக்களப்பில் நடைபெற்ற படுகொலைசம்பவம். சிறுவயதிலேயே குறித்த பெண் விடுதியொன்றில் விடப்பட்டு சீரழிக்கப்பட்டுள்ளார். அதன் காரணமாக ஏதோவொன்றுக்கு அடிமையான நிலையிலேயே அந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.
பெண்னொருவர் படுகொலைகொலை செய்த சம்பவமானது நாங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளமுடியாது. இவ்வாறான சம்பவங்கள் ஏற்படாமல் காப்பதுதான் எங்களது பொறுப்பு.
இன்று எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட முடியாமல் உள்ளது. காரணம் அனைத்துக்கும் இலஞ்சம் பெறும்செயற்பாடாகும். பொலிஸார் தொடக்கம் கிராம சேவையாளர் வரையில் இலஞ்சம் பெறப்படுகின்றது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.