ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், கொவிட்-19 நோய்த்தொற்றுகளின் வியத்தகு உயர்வுக்கு பதிலளிக்கும் விதமாக, வெளியில் கட்டாய முகக்கவசத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
அத்துடன், இராணுவத்தின் அதிக ஈடுபாட்டுடன் தடுப்பூசி பூஸ்டர் திட்டத்தை முடுக்கி விடுவதாகவும் அவர் அறிவித்தார்.
தற்போது ஸ்பெயினில் கொவிட் தொற்று வேகமெடுத்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஓமிக்ரோன் மாறுபாடு ஐரோப்பா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. மேலும் இப்பகுதி மீண்டும் தொற்றுநோயின் மையத்தில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
ஸ்பெயினில், இந்த மாறுபாடு கிட்டத்தட்ட பாதி நோய்த்தொற்றுகளுக்கு காரணம் என்று நம்பப்படுகிறது.
ஸ்பெயினில் 100,000 பேருக்கு 695 தொற்றுகளாக உயர்ந்துள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட அதிகமாகும்.
2021ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் திகதி முதல் மற்றவர்களிடமிருந்து 1.5 மீட்டர் பாதுகாப்பான தூரத்தை வைத்திருக்கும் போது வெளியில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படவில்லை.
ஆஸ்திரியா டிசம்பர் 27ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 22:00 மணிக்கு உணவகங்களை மூடத் தொடங்க உள்ளது, மேலும் மக்கள் புத்தாண்டை சிறிய அளவில் கொண்டாட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
போர்த்துக்கல் மதுபானசாலைகள் மற்றும் இரவு விடுதிகளை ஞாயிற்றுக்கிழமை முதல் மூட உத்தரவிட்டுள்ள நிலையில், பின்லாந்தில் மதுபானசாலைகள் மற்றும் உணவகங்கள் டிசம்பர் 28 முதல் 18:00 மணிக்கு மூடப்பட வேண்டும் மற்றும் குறைந்த இருக்கைகளைக் கொண்டிருக்கும்.
இதற்கிடையே, ஒமிக்ரான் பரவலைத் தடுத்து நிறுத்துவதற்காக, 5 முதல் 11 வயதுடைய சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை பிரான்ஸ் புதன்கிழமை தொடங்கியது.
மற்றோர் ஐரோப்பிய நாடான ஜேர்மனியில், கடுமையான பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் 28ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தத் திகதிக்குப் பிறகு, 10 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை விதிக்கப்படும்; இரவு விடுதிகள் மூடப்படும்; விளையாட்டுப் போட்டிகளை நேரில் காண இரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படாது.
சுவீடன் நாட்டு உணவகங்கள், மதுபானக் கூடங்கள் போன்றவற்றில் புதன்கிழமை முதல் தீவிர சமூக இடைவெளி கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
மற்றொரு ஐரோப்பிய நாடான நெதர்லாந்து, ஏற்கெனவே கடுமையான பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை திங்கள்கிழமை முதல் அமுல்படுத்தியுள்ளது.