இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிற்கு அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில், தமிழ்பேசும் கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டத்தில் அது நிச்சயம் பங்கேற்கும் என இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கொட்டகலையில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிற்கு இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை. அதற்கு அரசியலும் காரணமாக இருக்கலாம்.
சம்பந்தன் ஐயா மூத்த அரசியல்வாதி. அவரை நாம் மதிக்கின்றோம். மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் காலத்திலும் எமக்கு தொடர்பு இருந்தது.
எமக்கு அழைப்பு விடுக்கப்படும்பட்சத்தில் அந்த வேலைத்திட்டத்தில் பொதுநலன் இருப்பின் பங்கேற்போம். எமக்கு அழைப்பு விடுக்கப்படாவிட்டாலும்கூட எல்லோரும் ஓரணியில் இணைந்துள்ளமை மகிழ்ச்சி.” எனக் குறிப்பிட்டுள்ளார்.