சுனாமி பேரலையால் உயிர்நீத்த மக்களை நினைவுகூர்ந்து இன்று காலை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 09.25 தொடக்கம் 9.27 வரை 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி உலகையே ஆட்டிப்படைத்த கறுப்பு தினமாக பதிவாகிய சுனாமி ஆழிப்பேரலை தாக்கி இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இதேபோன்றதொரு நாளில் இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக இந்து சமுத்திரத்தில் ஆழிப்பேரலை ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோளில் 9.1 முதல் 9.3 மெக்னிடீயூட்டாக பதிவாகிய அந்த நில அதிர்வு காரணமாக ஏற்பட்ட பேரலையால், ஆசிய நாடுகளில் வரலாறு காணாத அழிவு ஏற்பட்டது.
இதன் காரணமாக இந்து சமுத்திர பிராந்தியத்தில் சுமார் 100 அடி உயர்த்திற்கு ஆழிப்பேரலை உருவாகியது.
இலங்கை, இந்தியா, மலேசியா, மியன்மார், அந்தமான், தாய்லாந்து உள்ளிட்ட 14 ஆசிய நாடுகளின் கரையோரங்களை இந்த ஆழிப்பேரலை தாக்கியது.
ஆசிய நாடுகளில் 2 இலட்சத்து 27 ஆயிரத்து 898 உயிர்களை காவுகொண்ட இந்த ஆழிப்பேரலை, 5 இலட்சத்துக்கும் அதிகமான மக்களை நிர்க்கதியாக்கியது.
இலங்யைில் மாத்திரம் 30 ஆயிரத்து 196 உயிர்கள் காவுகொள்ளப்பட்டதுடன், இந்த அனர்த்தத்தால் 21 ஆயிரத்து 411 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், சுனாமியால் காவுகொள்ளப்பட்ட உயிர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 26ஆம் திகதி உலக மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.
அதற்கமைய, இலங்கையிலும் நாடளாவிய ரீதியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளன.
இந்த கொடிய அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும் மக்களின் மனங்களில் உள்ள அச்சமும் ரணங்களும் மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.