நாட்டில் தற்போது கொரோனா நோயின் ஆபத்து இல்லை எனக் கருதி ஐம்பது வீதமான பொதுமக்கள் தங்களின் பூஸ்டர் டோஸ்களைப் பெற முன்வருவதில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHI) தெரிவித்துள்ளது.
தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அறிவிப்புகள் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாக தெரிவித்த அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண, இதன் காரணமாக கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக எண்ணி, மக்கள் மிகவும் கவனக்குறைவாகவும், சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதில் அறியாமையைக் காட்டுவதாகவும கூறினார்.
இருப்பினும், சமூகத்தின் அடிமட்டத்தில், நிலைமை மோசமடைந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு மேலும் தெரிவித்த அவர், அரசாங்கம் தினசரி 500 முதல் 600 வரையிலான கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை அறிவிப்பதாகவும் ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் தினமும் அறிவிக்கப்படும் தரவு துல்லியமானது அல்ல என்று அவர் கூறினார்.
இந்நிலையில், மக்கள் கொரோனா விதிகளை மீறி மோசமாக நடந்துகொள்வதை அவதானிப்பதாக அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் முடிவடைந்த கிரிக்கெட் போட்டிகளில், ரசிகர்கள் பெரும்பாலும் முகக்கவசம் இல்லாமல் காணப்பட்டதோடு, சமூக இடைவெளியை பராமரிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
தினசரி நேர்மறை வழக்குகள் குறித்த தவறான அறிவிப்புகளால், நாடு தொற்றுநோய் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததாக மக்கள் மனநிறைவுடன் உள்ளனர் என்றும் இந்த மனநிறைவு மக்களை கவனக்குறைவாக நடந்துகொள்ள வழிவகுக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, நாட்டில் மிக விரைவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும், அத்தகைய பேரழிவு நிலைக்கு நாட்டை இழுத்துச் செல்வதற்கான பொறுப்பை சுகாதார அதிகாரிகளும் அரசாங்கமும் ஏற்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.