நோயெதிர்ப்பு சக்தி குறைபாடுள்ளவர்கள் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை இரண்டாவது டோஸுக்கு ஒரு மாதத்திற்குப் பின்னர் பெறலாம் என இலங்கையின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைராலஜி துறையின் ஆலோசகர், வைத்தியர் நதீகா ஜனகே ஊடகமொன்று தெரிவித்துள்ளார்.
புற்றுநோய் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை நோயாளிகள் போன்ற நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள் மற்றும் சில நோயெதிர்ப்புத் தடுப்பு மருந்துகளை உட்கொள்பவர்கள் மூன்று மாதங்கள் காத்திருக்காமல், இரண்டாவது டோஸில் இருந்து ஒரு மாதத்திற்குப் பின்னர் பூஸ்டர் டோஸைப் பெற முடியுமென அவர் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாட்டின் தாக்கத்தை அனைவரின் நோய் எதிர்ப்பு சக்தியைஅதிகரிப்பதன் மூலம் குறைக்க முடியும் என்று அவர் மேலும் கூறினார்.
எவ்வாறாயினும் தடுப்பூசி செலுத்தப்பட்ட சமூகத்தினரிடையேயும் ஒமிக்ரோன் மாறுபாடு வேகமாக பரவக்கூடும் என்றும் அவர் சுட்டி்க்காட்டினார்.
அத்தோடு, ஒமிக்ரோன் மாறுபாட்டின் அதிக பரவல் காரணமாக, வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் விகிதம் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.