இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றமையினால், வான் ரோந்துப் பணிகளில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன போர் விமானங்களை இந்தியா சேர்த்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக இந்திய விமானப் படையின் செய்தித் தொடர்பாளர் விவேக் மத்வால் தெரிவித்துள்ளதாவது, “நீர் மூழ்கிக் கப்பல்களைக் கண்டறியும் போர் விமானமும், கடல் பகுதியை வானிலிருந்து உளவு பார்க்கும் பொஸைடன் 8ஐ அதிநவீன கடல் ரோந்து விமானமும் அமெரிக்காவிடம் இருந்து கடந்த டிசம்பர் 30ஆம் திகதி இந்தியா பெற்றது.
இதில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்ப கருவிகள் பொருத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது அவை இந்திய பெருங்கடல் பகுதியில் ரோந்துப் பணியில் சேர்க்கப்பட்டுள்ளன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பொஸைடன் 8ஐ ரகத்தைச் சேர்ந்த 8 விமானங்களை 2013இல் முதல்முறையாக இந்தியா வாங்கியது. இவை அரங்கோணத்திலுள்ள ஐ.என்.எஸ் ராஜாளி விமானப் படைத் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று இரண்டாம் கட்டமாக வாங்கப்பட்ட 4 விமானங்கள் கோவாவிலுள்ள ஐ.என்.எஸ் ஹான்சாலில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
இவை இந்திய பெருங்கடலில் சீனாவின் கப்பல்கள், நீர் மூழ்கி கப்பல்கள் ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.