கொரோனா வைரஸ் தற்போது நாட்டில் கட்டுப்பாட்டில் உள்ளபோதும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட அனைத்து சுகாதார நடவடிக்கைகளும் தொடர வேண்டும் என சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
சுற்றாடல் அமைச்சில் நடைபெற்ற கொரோனா பரவலைத் தடுப்பதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கமளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கொரோனா தடுப்புக்காக சுகாதார அதிகாரி ஒருவரின் சேவையைப் பெறுமாறு ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
நியூயோர்க் நகரில் நோயாளிகள் இன்னும் பதிவாகி வருகின்றனர் என தெரிவித்த அவர், இங்கிலாந்தில் தினமும் சுமார் ஒரு இலட்சம் நோயாளிகள் பதிவாகுவதாகத் தெரிவித்தார்.
இலங்கையும் கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் காரணமாக நிறைய சிரமங்களை எதிர்கொண்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேசமயம், ஒமிக்ரோன் வைரஸ் இந்த நாட்களில் உலகம் முழுவதும் பரவி வருகிறதென்றும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும் இலங்கையில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் உள்ளதாக தெரிவித்த அவர், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நோயாளிகள் பதிவாகியிருந்தாலும் இறப்பு வீதம் குறைந்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
எனவே, தனிப்பட்ட இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதோடு, முகக்கவசங்களை அணிவது மற்றும் கைகளை சுத்தம் செய்வது ஆகியவை கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த ஒரு தந்திரமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.