நிவாரணம் வழங்கும் வரை ஏசினார்கள். மக்களுக்கு நிவாரணம் வழங்கும் போது மகிழ்ச்சி அடைவதற்குப் பதிலாக விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளின் போலித்தனம் அம்பலமாகியுள்ளது. ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மாவத்தகம நீர் வழங்கல் திட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ” நாங்கள் ஒரு நியாயமான அரசாங்கம். நாங்கள் எங்கும் மத, இன பிளவுகளை விதைக்கும் அரசாங்கம் அல்ல. இன, மத பிளவுகளை விதைப்பதாக எதிர்க்கட்சிகள் எம்மை அவதூறு செய்கின்றன. அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் சிங்கள, தமிழ், முஸ்லிம், பர்கர் மற்றும் மலாய் என அனைத்து சமூகத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளார்.
முதல், இரண்டாம் மற்றும் மூன்றாவது தடுப்பூசிகளை வெற்றிகரமாக ஏற்றி, கோவிட் தொற்றுநோயிலிருந்து மக்களைக் காப்பாற்றிய தலைவராக வரலாற்றில் இடம் பெறுவார். நம் அண்டை நாட்டில் மக்கள் நின்ற நிலையில் இறப்பதை காண்கிறோம்.
எங்கள் மக்கள் ஆக்ஸிஜன் இல்லாமல் ஆஸ்பத்திரிகளில் இறந்துவிடுவார்கள், படுக்கைகள் இல்லாமல் மக்கள் இறந்துவிடுவார்கள், மேலும் கோவிட் தொற்றுநோய் காரணமாக இலங்கையில் சுமார் 200,000 மக்கள் மரணிப்பார்கள் என்று எங்கள் எதிர்க்கட்சி கணித்து கூறியது. தடுப்பூசி கொண்டு வந்தபோது, தடுப்பூசி போட வேண்டாம் என்று கூறினார்கள்.
தடுப்பூசி போடப்பட்டவர்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் இறந்துவிடுவார்கள் என்றார்கள். தடுப்பூசிகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சிகள் மக்களிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தியது. இப்படி மக்களுக்கு சொன்ன தலைவர்கள் ரகசியமாக சென்று தடுப்பூசி போட்டார்கள்.
ஆனால் அவர்களுக்கு வாக்களித்த மக்களிடம் நிவாரணம் பெற்றுத் தருமாறு கேட்கவில்லை. கோவிட் தொற்று நோய் நிலைமையின் போது, தங்களுக்கு வாக்களித்த மக்களை முடிந்தவரை தெருக்களில் இறங்கி, கோவிட் தொற்றை பரப்பி , அவர்களின் சடலங்களின் மீது அரசியல் அதிகாரத்தைப் பெற எதிர்க்கட்சி செயற்பட்டது.
இந்த நாட்டை அபிவிருத்தியின் உச்சத்திற்கு கொண்டு செல்வோம். நாடு வங்குரோத்து அடைய இடமளிக்க மாட்டோம். டாலர்கள் இல்லாமல் நாடு வங்குரோத்து ஆகும் என்றும், 15ம் திகதிக்குள் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றும் எதிர்க்கட்சி எதிர்பார்க்கிறது. இவை தற்காலிகமான பிரச்சினைகள். இந்தப் பிரச்சினைகள் நம்மை மட்டுமல்ல, உலகின் மற்ற நாடுகளையும் பாதித்துள்ளது.
ஊழலற்ற இந்த நாட்டை ஆட்சி செய்ய ஆட்சிக்கு வந்த அதிமேதகு ஜனாதிபதி நாட்டை கட்டி எழுப்பி வருகிறார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் எதிர்க்கட்சிகள் கிறீஸ் பிசாசுகளை உருவாக்கினார்கள்.
நாடாளுமன்றம் தனது அதிகாரத்தை இழந்துள்ளது . ஆளும் தரப்பில் இருந்து எதிர் தரப்புக்கு 30 -40 பேர் தாவ போகிறார்கள். இப்படி ஒவ்வொரு பிசாசுகளை எதிரணி உருவாக்கிக்கொண்டிருக்கிறது. அந்த கனவு அரண்மனைகளுக்குள் சிலர் அமர்ந்து எம்மீது சேறு பூசுகிறார்கள்.
நாம் அவர்களை அவ்வளவாக பொருட்படுத்துவதில்லை. இந்த நாட்டை அபிவிருத்தி செய்வோம் என இந்த நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்தோம். அந்த வாக்குறுதியை நாங்கள் காப்பாற்றுகிறோம். உலகம் முழுவதையும் பாதித்த கோவிட் தொற்றுநோயை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தினோம். வெற்றிகரமான தடுப்பூசிகள் மூலம் நாம் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளை விட முன்னணியில் இருக்கிறோம்.
தயக்கத்துடன் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியதாயிற்று.எங்களில் யாருக்கும் அதில் விருப்பமில்லை. புத்தாண்டில் மக்களுக்கு நிவாரணம் வழங்கினோம். எதிர்வரும் தேர்தலை இலக்கு வைத்து நாங்கள் இவற்றைச் செய்தோம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன.
நிவாரணம் வழங்கப்படும் வரை, வாக்குறுதி அளிக்கப்பட்ட நிவாரணம் எங்கே என்று வினவினார்கள். நிவாரணம் வழங்கப்படும் போது பியகமவில் உள்ள தொழிற்சாலையில் அச்சடித்து வழங்குவதாக விமர்சிக்கிறார்கள். மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் போது எதிர்க்கட்சிகளின் உள்ளத்தில் உள்ள கபட எண்ணம் வெளியே வருகிறது. எதிர்க்கட்சிகள் உங்களை வீழ்த்த முயன்றாலும் மக்கள் வீழ்ந்து விடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.” என தெரிவித்தார்.