சர்வதேச கிரிக்கெட் சபையின் 19 வயதுக்குட்பட்டவருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகின்றது.
மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் 14ஆவது 19 வயதுக்குட்பட்டவருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி வரை நடைபெறுகின்றது.
இதில் இலங்கை, இந்தியா, நடப்பு சம்பியன் பங்களாதேஷ் உட்பட 16 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. மொத்தம் 48 போட்டிகள் நடக்கிறது.
ஆண்டிகுவா, கயானா, செயின்கிட்ஸ், டிரினிடாட் ஆகிய 4 இடங்களில் போட்டி நடக்கிறது. பெப்ரவரி 5ஆம் திகதி நடைபெறும் இறுதிப்போட்டி ஆண்டிகுவாவில் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
இன்று நடைபெறும் ஆரம்ப போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணியும் அவுஸ்ரேலியா அணியும் கயானா மைதானத்தில் மோதுகின்றன. இதனைத்தொடர்ந்து நடைபெறும் இரண்டாவது போட்டியில், இலங்கை அணியும் ஸ்கொட்லாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
19 வயதுக்குட்பட்டவருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் சபை) 1988ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
இதுவரை 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர், 13 முறை நடந்துள்ளது. இதில் இந்தியா அதிகபட்சமாக 4 முறை உலகக்கிண்ணத்தை வென்றது. அவுஸ்ரேலியா 3 முறையும், பாகிஸ்தான் 2 முறையும், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் தலா ஒரு முறையும் உலகக்கிண்ணத்தை கைப்பற்றியுள்ளன.