தெற்கு பசுபிக் கடலில் பதிவான பாரிய எரிமலை வெடிப்பு சம்பவத்தை அடுத்து உருவான சுனாமி பேரலையை அடுத்து பசுபிக் கரையோரங்களில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்காவும் ஜப்பானும் அறிவுறுத்தியுள்ளன.
மூன்று மீற்றருக்கும் அதிக உயரத்திற்கு கடல் அலை காணப்படும் என்றும் தமது தெற்கு கரையில் 1.2 மீற்றருக்கும் அதிக உயரத்திற்கு அலை தாக்கக்கூடும் என்றும் ஜப்பான் எதிர்வு கூறியுள்ளது.
வலுவான நீரோட்டங்கள், அதிகரித்த அலை மற்றும் கரையோரப் பகுதிகளில் வெள்ளம் என்பன குறித்து அமெரிக்காவும் எச்சரித்துள்ளது.
கடலுக்கு அடியில் ஏற்பட்ட குறித்த எரிமலை வெடிப்பு காரணமாக டொங்காவில் சுனாமி தாக்கியுள்ளது.
மேலும் ஹங்கா டோங்கா-ஹுங்கா ஹாஅபாய் எரிமலையின் வெடிப்பு சத்தம் தென் பசிபிக் முழுவதும் உணரப்பட்டதோடு வெடிப்பின் சத்தம் இறுதியாக அமெரிக்கா வரையில் பதிவாகியுள்ளது.
அத்தோடு எரிமலை வெடிப்பு இடம்பெற்ற பகுதியிலிருந்து 65 கிலோமீற்றர் தொலைவில் உள்ள டொங்காவின் பல பகுதிகள் சாம்பலால் மூடப்பட்டுள்ளதோடு அங்கு மின்சாரம், தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளன.