தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்காரணமாக நகரங்களில் வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுவதாகவும் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொலிஸார் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமிக்ரோன் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையை போல் இன்றும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், மருந்தகங்கள், எரிபொருள் நிலையங்கள் ஆகியவை வழக்கம் போல் செய்பட்டு வருகின்றன.
மேலும் இன்று காணும் பொங்கல் என்பதால் கடற்கரை, பொழுது போக்கு பூங்காக்களில் மக்கள் கூடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் அண்ணாசாலை, காமராஜர் சாலை, கடற்கரைச் சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.