1970களில் இரண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்காக ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ஷெஃபீல்ட் கிரவுன் நீதிமன்றத்தால், பிரபு நசீர் அஹமட் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், ஐக்கிய இராச்சியத்தில் உள்ள முன்னாள் பிரபுக்கள் சபை உறுப்பினரான பிரபு நசீர் அஹமட் தனக்கு எதிரான எட்டு பாலியல் குற்றங்கள் தொடர்பாக நீதிமன்றத்தின் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.
ஷெஃபீல்ட் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது நடுவர் மன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களுக்கு முற்றிலும் எதிராக தீர்ப்புகள் வந்துள்ளன’ என பிரபு நசீர் அஹமட்டின் சட்டப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிரபு நசீர் அஹமட் ‘தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய நாங்கள் எங்கள் வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்,’ என்றும் அவர் கூறியுள்ளார்.
1970களில் இளைய வயதினராக இருந்தபோது ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் பிரபு நசீர் அஹமட் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்தது.
மார்ச் 2019 இல், பிரபு நசீர் அஹமட் இரண்டு குழந்தைகளுக்கு எதிரான வரலாற்று பாலியல் குற்றங்களில் ஈடுபட்டார் என்றும் 1970களின் முற்பகுதியில் இரண்டு கற்பழிப்பு முயற்சி மற்றும் ஒரு அநாகரீகமான தாக்குதல் ஆகிய செயற்பாடுகளில் பிரதான குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டார்.
பிரபு நசீர் அஹமட் மீது இளைஞர் மற்றும் பெண் ஆகியோர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். 1971, 1974இக்கு இடையில் பிரபு நசீர் அஹமட் பதின்ம வயதினராக இருந்தபோது அவர் குற்றங்களில் ஈடுபட்டதாக 14 வயதுக்குட்பட்ட சிறுவன் ஒருவரும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பிரபு நசீர் அஹமட் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான காஷ்மீரில் பிறந்தார், பின்னர் அவர் தனது பூர்வீகத்தினருடன் 1969இல் ரோதர்ஹாமிற்குச் சென்றிருந்தார், அங்கு வளர்ந்த அவர் இன்னமும் அங்ககேயே உள்ளார்.
எஃகுத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தனது தந்தையுடன் சேர்ந்து, 1975இல் தனது 18 வயதில் தொழிலாளர் கட்சியில் சேர்ந்ததுடன், 1990 இல் ரோதர்ஹாமில் கவுன்சிலரானார்.
ரோதர்ஹாம் பெருநகர பேரூராட்சி கவுன்சிலில் ஒரு தசாப்த காலம் பணியாற்றினார். அத்துடன் ஷெஃபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகத்தில் படித்த பிறகு, அவர் தனது சொந்த ஊரில் கடைத்தொகுதிகளை ஆரம்பித்தார்.
1998இல், அப்போதைய பிரதமர் டோனி பிளேயரால் ஹவுஸ் ஆஃப் லோர்ட்ஸுக்கு நியமிக்கப்பட்ட முதல் முஸ்லிம் நபரானார். அத்துடன், 2013இல் தொழிலாளர் கட்சியில் இருந்து விலகினார்.
நவம்பர் 2020 இல், பல பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் அனைத்துப் பதவிகளிலும் இருந்து இராஜினாமா செய்ததோடு, காலிஸ்தானி பயங்கரவாத குழுக்களின் தீவிர ஆதரவாளராகவும், இந்திய அரசின் கொள்கைகளை விமர்சிப்பவராகவும் இருந்தார்.
அவர் தன்னை காஷ்மீர் பூர்வீகக் குடியாளன் என்று முன்வைத்த போதிலும், உண்மையில் அவர் தனது நிலையை காஷ்மீர் பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டுவதற்காக பயன்படுத்தினார்.
நவம்பர் 14 ஐக்கிய இராச்சியத்தின் ஹவுஸ் ஆஃப் லோர்ட்ஸ் நடத்தைக் குழு அவர் வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
லண்டனில் உள்ள காஷ்மீரி பெண்கள் குழு, நசீர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் மற்றும் காஷ்மீரி சமூகத்தில் பெண்களைச் சுரண்டுகின்றவர்கள் என்று பிரசாரம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.