நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பதை உறுதிசெய்ய இந்தியாவின் உதவியை கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் பேசும் கட்சிகளின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கடிதம் எழுதியுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து கடிதம் ஒன்றை கையளித்தது.
இலங்கையில் அரசாங்கங்களினால் வழங்கப்பட்ட பல நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் மற்றும் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கும் அதற்கு அப்பால் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி ஏழு பக்க கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
1987 இன் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் காலத்திலிருந்து, பல்வேறு நிபுணர் குழுக்களால் உருவாக்கப்பட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில், அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்கான கடந்த கால முயற்சிகளை இந்த கடிதம் சுட்டிக்காட்டுகின்றது.
பல்வேறு கட்டங்களில் இந்திய அரசியல் தலைமையின் தலையீடுகள் குறிப்பாக 2015 இல் இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரை உள்ளிட்ட விடயங்களை மேற்கோளிட்டு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் வடக்கு, கிழக்கில் தமிழர்களுக்குச் சொந்தமான காணிகள் அபகரிப்பு மற்றும் திட்டமிட்ட மீள்குடியேற்றம் மலையகத்தில் வாழும் மலையகத் தமிழர்கள் உட்பட தமிழ் பேசும் மக்களின் மொழி உரிமைகள் போன்றவற்றின் மீதான தாக்குதல் குறித்தும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிகாரப் பகிர்வை உறுதி செய்யும் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் விதிகளை முழுமையாக அமுல்படுத்துவதற்கான வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என பிரதமர் மோடியிடம் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஒன்றுபட்ட, பிரிக்கப்படாத நாடு என்ற கட்டமைப்பிற்குள் சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்தி, அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க வாழ்விடங்களில், கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும், அமைதியுடனும், பாதுகாப்புடனும் வாழ வேண்டும் என்றும் இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை செயற்படுத்த இந்தியாவின் அழுத்தத்தையும் அவர்கள் கோரியுள்ளனர்.
இதேவேளை புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு குறித்து அரசின் கொள்கை பிரகடன உரையில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குழுவின் பரிந்துரைகளை அமைச்சரவைக்கும் நாடாளுமன்றத்துக்கும் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தாம் நம்புவதாகவும் கூறினார்.
ஆனால் அவர் கூறிய புதிய அரசியலமைப்பில் தமிழ் அரசியல் தலைமைகள் தொடர்ச்சியாக வலியுறுத்தும் இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.
மறுபுறம் போரினால் பாதிக்கப்பட்டபகுதிகளில் நடைபெறும் அபிவிருத்தி பணிகளே நல்லிணக்கத்திற்கான அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாக கருதுவதாக கூறியிருந்தார்.
எனவே அரசியல் ரீதியிலான முரண்பாடுகளை தற்காலிகமாவது ஒதுக்கிவைக்குமாறு வடக்கு மற்றும் கிழக்கு மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
அத்தோடு நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை ஆதரிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்துகோட்டாபய ராஜபக்ஷ இதுவரை தமிழ் தலைமைகளுடனோ அல்லது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனானோ பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
இதற்கிடையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.