கொவிட்-19இன் ஓமிக்ரோன் மாறுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கு நாடு கடுமையான முடக்கநிலை கட்டுப்பாடுகளை ஏற்காது என நியூஸிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.
எனினும், சில கட்;டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
நியூஸிலாந்து இன்னும் ஓமிக்ரோன் மாறுபாட்டின் தொற்றைக் காணவில்லை என்றாலும், அது தவிர்க்க முடியாதது என்று ஆர்டெர்ன் கூறினார்.
நியூஸிலாந்திற்கு வரும் ஓமிக்ரோன் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தலில் நுழைய வேண்டும். ஒரு தொற்று கண்டறியப்பட்டால், நாடு சிவப்பு அமைப்பு நெறிமுறைகளை ஏற்றுக்கொள்ளும்.
ஓமிக்ரோனுக்கான தயாரிப்பில் பூஸ்டர் தடுப்பூகளைப் பெற குடிமக்களை ஆர்டெர்ன் ஊக்குவித்தார். இது தொற்றின் போது மருத்துவமனைகளில் கூட்டத்தை குறைக்கும் என்று கூறினார்.
மேலும், பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் கூறுகையில், ‘இந்தக் காலகட்டத்தில் நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் தொற்று, முன்பை விட வித்தியாசமானது. ஒமிக்ரோன் அதிகம் தொற்றும் தன்மை கொண்டது. இது கடினமாக இருக்கப் போகிறது. கொவிட் மாறும்போது நாமும் மாற வேண்டியுள்ளது. ஆனால், இந்த முறை ஒமிக்ரோன் காரணமாக கொரோனா பரவல் ஏற்பட்டாலும் முடக்கநிலையை அமுல்படுத்தும் திட்டம் இல்லை.
கட்டுப்பாடுகளை மட்டுமே விதிக்க உள்ளோம். கடைகள் திறப்பு, உள்ளூர் போக்குவரத்து வழக்கம் போல் இருக்கும். பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும்’ என கூறினார்.
நியூஸிலாந்து தற்போது ஒவ்வொரு நாளும் டெல்டா மாறுபாட்டின் சுமார் 20 புதிய தொற்றுகளைப் பார்க்கிறது. ஓமிக்ரோன் மாறுபாட்டின் காரணமாக நாளொன்றுக்கு நூறாயிரக்கணக்கான புதிய தொற்றுகளால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா போன்ற பிற நாடுகளை விட அந்த தொற்று வீதம் மிகவும் குறைவாக உள்ளது.
நியூஸிலாந்தில் 93சதவீதத்துக்கு மேலான மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். 52 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நியூஸிலாந்தில் 5 முதல் 11 வயதுள்ள சிறுவர்களுக்குத் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.