ஜப்பானில் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பைஸர்- பயோன்டெக் கொரோனா தடுப்பூசியை செலுத்த அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன்படி, தடுப்பூசி பெற தகுதியுடைய 80 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் மார்ச் மாதத்தில் தொடங்கும் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜப்பானில் 12 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான கொவிட்-19 தடுப்பூசியின் முதல் அங்கீகாரத்தை இது குறிக்கிறது.
மேலும், பைஸர்- பயோன்டெக் தடுப்பூசி பெறுவதற்கான வயதுக் கட்டுப்பாட்டைக் குறைக்க சுகாதார அமைச்சக நிபுணர்கள் குழு ஒப்புக்கொண்ட ஒரு நாளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் அரசாங்கம், 7.2 மில்லியன் சிறுவர்களுக்கு அதாவது மக்கள்தொகையில் சுமார் 6 சதவீத அந்த வயதினருக்கு தடுப்பூசி கிடைக்கச் செய்ய விரைவாக செயற்படும்.
மொடர்னா தடுப்பூசிகள் ஜப்பானில் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்குப் பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசிகள் 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு, கொள்கையளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சகம் ஆரம்பத்தில் இளம் சிறுவர்களுக்கான தடுப்பூசி வெளியீட்டை அடுத்த மாதம் தொடங்க திட்டமிட்டது. ஆனால் பெப்ரவரி வரை தடுப்பூசிகளின் இறக்குமதி தொடங்கப்படாது என்பதால் அந்த திட்டம் தாமதமானது. ஜப்பானில், 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்குப் பயன்படுத்தப்படும் தடுப்பூசி சூத்திரம் தனித்தனியாக பயன்படுத்தப்படும்.
ஜப்பானில், 15 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடைய சிறுவர்கள், கொவிட்-19 தடுப்பூசியை பெறுவதற்கு பெற்றோரின் கையொப்பம் இருக்க வேண்டும். ஆனால் சில பெற்றோர்கள் பக்கவிளைவுகள் குறித்து கவலை தெரிவித்தனர்.
தேசிய குழந்தைகள் நலம் மற்றும் மேம்பாட்டு மையம், கடந்த செப்டம்பரில் நடத்திய ஆய்வில், தொடக்கப் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைய சிறுவர்களின் பாதுகாவலர்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட விரும்புகிறார்கள். அதே நேரத்தில் அவர்களில் 20 சதவீத பேர் அதற்கு எதிராக சாய்ந்துள்ளனர்.
ஜப்பானில் ஏற்கனவே 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தீவிரமாகத் தொற்றும் தன்மை கொண்ட ஒமிக்ரோன் வகை கொரோனா ஜப்பானில் வேகமாக பரவி வருவதையடுத்து, அங்கு அடுத்த மாதம் 13ஆம் திகதி வரை தீவிர நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகளை மேலும் விரிவுபடுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
கொரோனா பரவலைத் தடுப்பதற்காக ஏற்கெனவே ஒகினாவா, ஹிரோஷிமா, யமகுசி ஆகிய 3 பகுதிகளில், நெருக்கடிக்கு நிலைக்கு முந்தைய கட்டுப்பாட்டு விதிமுறைகள் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
அந்த விதிமுறைகள், தற்போது தலைநகர் டோக்கியோ மற்றும் 12 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படவிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.