தற்போது நிலவும் கடுமையான எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருள் பாவனையை குறைப்பதற்கான அவசர யோசனையை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அரசிடம் சமர்ப்பித்துள்ளார்.
எரிபொருள் விலை சூத்திரத்தை உடனடியாக அமுல்படுத்துமாறும் , கொழும்புக்கு வரும் வாகனங்களை மட்டுப்படுத்தவும் வாரத்தில் ஒரு நாள் காணொளி தொழில்நுட்பம் மூலம் பாடசாலைகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்தோடு அரச நிறுவனங்களின் கூட்டங்கள், கலந்துரையாடல்கள் மற்றும் மாநாடுகளுக்கு அதிகாரிகளை அழைப்பதை மட்டுப்படுத்தவும், பிரதேச செயலாளர்களை கொழும்புக்கு வரவழைப்பதை மட்டுப்படுத்தவும் அவர் யோசனையை முன்வைத்துள்ளார்.
எரிபொருள் பாவனையை குறைப்பதற்காக எரிபொருட்களின் விலைகள் கணிசமாக அதிகரிக்கப்பட்ட போதிலும், தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
உல்லாசப் பயணங்கள், உறவினர்கள் வருகை போன்ற பயணங்கள் அதிகரித்துள்ளமையும் எரிபொருள் பாவனை அதிகரிப்புக்கு காரணம் என்றும் அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.
மேலும் பொது போக்குவரத்திற்கு பதிலாக தனியார் வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பு மற்றும் எரிவாயு பற்றாக்குறை காரணமாக மண்ணெண்ணெய் பயன்பாடு அதிகரிப்பு ஆகியவை எரிபொருள் நுகர்வு அதிகரிப்பதற்கு பங்களித்துள்ளன என சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, எரிபொருள் நெருக்கடியுடன் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியை சமாளிப்பதற்கான யோசனையொன்றை மின்சக்தி அமைச்சு அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.