ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான நிலைமை மோசமடைந்துள்ள நிலையில், தற்காலிக வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முட்டாகி தலைமையிலான தலிபான் குழு,மேற்கத்திய அதிகாரிகள் மற்றும் ஆப்கானிஸ்தான் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் மூன்று நாள் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் ஆரம்பமான இந்த பேச்சுவார்த்தைகள், எதிர்வரும் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறவுள்ளது.
முதல் முறையாக இருதரப்புக்கும் இடையே நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை மூடிய கதவுக்கு பின்னால், தலைநகருக்கு மேலே பனி மூடிய மலைகளில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்று வருகின்றது.
ஒகஸ்ட் மாதம், தலிபான்கள் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அவர்களின் பிரதிநிதிகள் ஐரோப்பாவில் உத்தியோகபூர்வ சந்திப்புகளை நடத்துகின்றனர்.
முதல் நாளில் தலிபான் பிரதிநிதிகள் பெண் உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் புலம்பெயர்ந்தோரைச் சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர்களை சந்தித்து பேச்சுவார்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையின் போது, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளால் முடக்கப்பட்ட சுமார் 10 பில்லியன் டொலர்களை விடுவிக்க தாலிபான்களின் கோரிக்கை விடுக்கவுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தீவிர பொருளாதார நெருக்கடி மற்றும் பட்டினியால் பல இடங்களில் பொதுமக்கள் அவதிப்படுவதாக செய்திகள் வருகின்றன. அந்த நாட்டில் கிட்டத்தட்ட 95 சதவீதம் பேருக்கு சாப்பிட உணவில்லை என்று ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.