பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் எவரையும் அரசியல் கைதிகள் என அடையாளப்படுத்த விரும்பவில்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
எனினும் இந்த விவகாரத்துக்குப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்களை செய்வதன் மூலம் விரைவில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் சிறைக்கைதிகளும் மனிதர்களே என்ற வாசகத்தை மாத்திரம் எழுதிவைப்பதால் சிறைக்கைதிகள் பாதுகாக்கப்படப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற தாக்குதல்கள், அச்சுறுத்தல் செயற்பாடுகள் குறித்து தாம் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளோம் என தெரிவித்த அமைச்சர், இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.
அதேபோல் இவ்வாறான ஒரு சில சம்பவங்கள் இடம்பெறுகின்ற காரணத்துக்காக ஒட்டுமொத்த சிறைச்சாலை கட்டமைப்பையும் தவறாகச் சித்தரிக்கவும் முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சகல நாடுகளிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என தெரிவித்த அமைச்சர், மாறாக இலங்கையில் மாத்திரம் இவை இடம்பெறுவதாகக் கூறவும் முடியாது எனவும் தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும் எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாத வகையில் சகல தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ஒரு சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டும் வருகின்றன எனவும் நீதி அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை தமிழ் அரசியல் கைதிகள் என கூறுவதை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்த அமைச்சர், நாட்டில் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட காரணத்தால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.
எவ்வாறிருப்பினும் இந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தரமாகத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதையே ஜனாதிபதியும் வலியுறுத்தியுள்ளார் என தெரிவித்த அமைச்சர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் திருத்துவதற்கு அரசு தற்போது முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது எனவும் தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வது குறித்து ஆராயும் விதமாக ஜனாதிபதியால் நிபுணர்கள் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதுடன், 42 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.
நீண்டகாலத்துக்கு இந்தப் பிரச்சினைகளை இழுத்தடித்துக்கொண்டு செயற்பட அரசு தயாராக இல்லை என தெரிவித்த அமைச்சர், பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வொன்று அவசியம் என்பதையே ஜனாதிபதியும் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்தார் என்றும் எனவே, அது குறித்து விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் நீதி அமைச்சர் தெரிவித்தார்.