எவ்வாறான கடினமான காலங்கள் வந்தாலும் அபிவிருத்தியில் அரசாங்கம் பின்வாங்கப் போவதில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அரசாங்கம் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ள போதிலும், நாட்டை வீழ்ச்சியடையச் செய்வதற்கு அது ஒரு காரணமல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையின் பெரும்பாலான கிராமப்புறங்களை அரசாங்கம் ஏற்கனவே அபிவிருத்தி செய்யத் தொடங்கியுள்ளதாகவும் பெப்ரவரி 3ஆம் திகதி 100,000 திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒவ்வொரு உள்ளூராட்சிப் பிரிவிற்கும் அரசாங்கம் 3 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், தற்போதைய அரசாங்கம் நாட்டை அபிவிருத்தி செய்வதில் கவனம் செலுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தகைய திட்டங்களில் 100,000 கிலோமீற்றர் வீதித் திட்டம், நீர்ப்பாசனத் திட்டங்கள், விளையாட்டு அரங்கங்களை உருவாக்குதல், தொழில்முனைவோரை உருவாக்குதல் உள்ளிட்ட ஏனைய திட்டங்களும் அடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.