யேமன் உள்நாட்டுப் போரில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களால் போரில் ஈடுபடுத்தப்பட்ட சுமார் 1,500 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
பாதுகாப்புக் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த 300 பக்க அறிக்கையில், 2020ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களால் ஈடுபடுத்தப்பட்ட 1,406 சிறுவர்களின் பட்டியலையும், அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் மே மாதங்களுக்கு இடையில் 562 சிறுவர்களின் பட்டியலையும் பெற்றதாக, அக்குழு கூறியுள்ளது.
2015 ஆம் ஆண்டு கிளர்ச்சியாளர்கள் மற்றும் யேமன் அரசுக்கு இடையே உள்நாட்டுப் போர் தொடங்கியதிலிருந்து பத்தாயிரத்திற்கும் அதிகமான சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் நடத்தும் வான்வழி தாக்குதல்கள் இன்னும் பல பொதுமக்கள் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் முழக்கமான அமெரிக்காவுக்கு மரணம், இஸ்ரேலுக்கு மரணம், யூதர்களை சபிக்கவும், இஸ்லாத்திற்கு வெற்றி’ என்ற முழக்கத்தை முழங்க அக்குழந்தைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் ‘ என, 4 உறுப்பினர்கள் அடங்கிய அக்குழுவின் நிபுணர்கள் கூறியதாக, ஏபி செய்தி முகமை தெரிவித்துள்ளது.
‘ஒரு முகாமில் 7 வயதுக்கும் குறைவான சிறுவர்களுக்கு ஆயுதங்களை சுத்தம் செய்யவும், ரொக்கெட்டுகளை தவிர்க்கவும் கற்றுக்கொடுக்கப்பட்டது’ என அவர்கள் தெரிவித்தனர்.
‘பாடசாலைகள், கோடைக்கால முகாம்கள் மற்றும் மசூதிகளைப் பயன்படுத்தி சிறுவர்களை சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்’ என அக்குழு அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்பு விடுத்தது மற்றும் அவ்வாறு செய்யாதவர்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்கவும் அக்குழு பரிந்துரைத்தது.