செனகல் நாட்டின் வடமேற்குப் பகுதியில், புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளை ஏற்றிச் சென்ற சிறிய படகு ஒன்று மூழ்கியதில் குறைந்தது 34 பேர் உயிரிழந்துள்ளதாக செனகல் செய்தி முகமை (APS) தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் நபரொருவர் உயிரிழடன் மீட்கப்பட்டுள்ளதாக செனகல் உள்துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை (08) வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் மற்றும் நட்புறவுக்கான நடவடிக்கை (ADHA) வெளியிட்ட ஓர் அறிக்கை, APS தெரிவித்த உயிரிழப்பு எண்ணிக்கையை உறுதிப்படுத்தியது.
டேக்கருக்கும் வடக்கே உள்ள செயிண்ட்-லூயிஸ் நகருக்கும் இடையில், கெபெமர் மாகாணத்தில் உள்ள லூம்பூல் மணல் குன்றுகளுக்கு அருகே, சனிக்கிழமையன்று குறித்த படகு கவிழ்ந்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அதே மாகாணத்தில் உள்ள லியோனா மற்றும் தியெப் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று ‘லெ சோலெய்ல்’ செய்தித்தாள் கூறியது.
மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஸ்பெயினின் கேனரி தீவுகளை அடைய முயன்ற ஆயிரக்கணக்கான மக்கள் அண்மைய ஆண்டுகளில் உயிரிழந்துள்ளனர்.
இதில் இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் 635 பேர் அடங்குவர் என புலம்பெயர்ந்தோர் உரிமைக் குழுவான ‘வாக்கிங் பார்டர்ஸ்’ தெரிவித்துள்ளது.
புலம்பெயர்ந்தோரின் படகு வருகை அதிகரித்ததைத் தொடர்ந்து, கேனரி தீவான எல் ஹியரோவில் உள்ள ஸ்பெயின் அதிகாரிகள் சனிக்கிழமையன்று அவசரநிலையை அறிவித்தனர்.
நவம்பர் மாதத் தொடக்கத்திலிருந்து, சுமார் 30 படகுகளில் 3,300-க்கும் மேற்பட்டோர் வந்தடைந்துள்ளதாக எல் ஹியரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.














