பிரிட்டனில் பொது முடக்க காலப்பகுதியில் நம்பர்-10 அலுவலகத்தில் இடம் பெற்ற விதிகளை மீறிய மது விருந்துகள், ஒன்று கூடல்களைத் “தலைமைத் துவத்தின் தோல்வி”(failures of leadership’) என்று முக்கிய விசாரணை அறிக்கை கண்டித்திருக்கிறது.
நடைபெற்ற ஒன்று கூடல்களில் பலவும் “அனுமதிக்க முடியாதவை” என்றும் அந்த அறிக்கை சாடியுள்ளது.நாட்டுமக்களுக்கு சமூக ஒன்று கூடல்கள் தடுக்கப்பட்ட சமயத்தில் நடந்துள்ள “அளவுக்கதிகமான மது பாவனை (“excessive consumption of alcohol”) என்று மது விருந்துகளை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
நாடெங்கும் கொரோனா சுகாதாரக் கட்டுப்பாடுகள் அமுலில் இருந்தவேளை பிரதமரது நம்பர் 10 அலுவலகத்திலும் அரச பணிமனைகளிலும் இடம் பெற்றதா கக் கூறப்படுகின்ற ஒரு டசினுக்கு மேற்பட்ட நிகழ்வுகள் தொடர்பாக விசாரிக்கும் பொறுப்பு மூத்த சிவில் அதிகாரியான சூ கிறே (Sue Gray) அம்மையாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அவரது விசாரணை அறிக்கை இன்று பிரதமர் அலுவலகத்திடம் கையளிக்கப்பட்டது.
12 பக்கங்கள் அடங்கிய அந்த அறிக்கை பிரதமர் ஜோன்சனுக்கு மேலும் நெருக் கடியைக் கொடுத்திருக்கிறது. அறிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்றுமாலை விளக்கமளித்த அவர், அதனை ஏற்றுக் கொள்வதாகக் கூறினார்.
ஆனால் தனது தவறுக்குப் பொறுப்பேற்று என்ன செய்யப் போகிறார் என்பது தொடர்பில் எதனையும் சொல்லாமல் தவிர்த்த அவர், நம்பர் 10 அலுவலகத்தினதும் அமைச்சரவைப் பணிமனையினதும் நிர்வாக நடைமுறைகளில் மாற்றங்களைச் செய்யப்போவதாக மட்டுமே கூறியிருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் “சொறி”(sorry) சொல்லிய பிரதமர் , உறுப்பினர்களது கடும்கண்டனக் கணைகளை வாங்க நேர்ந்துள்ளது.
பொலீஸ் விசாரணைகள் முடியும் வரைஇடம்கொடுங்கள் என்று பிரதமர் கூறியபதிலால் நாடாளுமன்றத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. நாட்டையும் உறுப்பினர்களையும் பிரதமர் ஏமாற்றுகிறார் என்று எதிர்க்கட்சியினர் குரல் எழுப்பினர்.
ஒன்று கூடவும், விருந்து உண்ணவும் நாட்டு மக்களுக்குத் தடைகளை அறிவித்துவிட்டு அரசுத் தலைமை தான் மாத்திரம் விதிகளை மீறிப் பலரை ஒன்று கூட்டி விருந்துகளை நடத்தியமை தெரியவந்ததால் பிரதமர் மீது நாட்டு மக்கள் கடும் அதிர்ப்த்தி அடைந்துள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
“பார்ட்டிகேற்” (party-gate”) என்று அழைக்கப்படுகின்ற இந்த லொக்-டவுண் விருந்து விவகாரம் பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் பதவியை ஆட்டம்காண வைத்திருக்கின்றது. எதிர்க்கட்சியினரும் அவரது ஆளும் கட்சியின் மூத்த தலைவர்களும் அவரைப்பதவி விலகுமாறு கோரி வருகின்றனர்.ஆனால் பிரதமரோ அதற்கு இணங்க மறுத்துள்ளார். சம்பவங்களுக்காக அவர் தனது மனப்பூர்வமான மன்னிப்பை ஏற்கனவே கோரியுள்ளார்.
இந்த நிலையிலேயே சூ கிறேயின் முதற்கட்ட அறிக்கை வெளியாகியிருக்கிறது. விதிகளை மீறிய இந்த விருந்துகள் தொடர்பில் குற்றம் இழைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக லண்டன் பெருநகரப் பொலீஸாரும் தனியே விசாரணை ஒன்றைத் தொடக்கியுள்ளனர்.
டவுணிங் வீதி அலுவலகத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் பிரதமரது பிறந்த நாள் கொண்டாட்டம் உட்பட நிகழ்வுகள் தொடர்பாக நூற்றுக்கணக்கான புகைப்படங்களும் ஆவணங்களும் தமக் குக் கிடைத்துள்ளன என்று பொலீஸ் தலைமை அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.