கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக இலங்கை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு சீனா முழு அளவிலான ஒத்துழைப்பினை வழங்கும் எனத் தெரிவித்துள்ளது.
சீன தேசிய மக்கள் காங்கிரசின் நிலையியற் குழுவின் தலைவர் லீ சஹான்சு ((Li Zhanshu), சபாநாயகர் மஹிந்த யாப்பா அபயவர்தனவிற்கு விடுத்துள்ள செய்தியிலேயே, இந்த விடயம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள சபாநாயகருக்கு தமது வருத்தத்தைத் தெரிவித்த அவர், விரைவில் பூரண சுகம் அடையப் பிரார்த்திப்பதாகவும் தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகள் பிரச்சினைகளில் இருந்து மீள பரஸ்பரம் ஒத்துழைப்பினை வழங்கி வருவதுடன், பாரம்பரிய உறவு மேலும் வலுவடைந்துள்ளதாகவும் சீன தேசிய மக்கள் காங்கிரசின் நிலையியற் குழுவின் தலைவர் லீ சஹான்சு குறிப்பிட்டுள்ளார்.