மியன்மார் இராணுவப் புரட்சியின் ஓராண்டு நிறைவையொட்டி, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் மியன்மாரின் மூத்த அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
அட்டர்னி ஜெனரல் திடா ஓ, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி துன் துன் ஓ மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் தலைவர் யு டின் ஓ ஆகியோருக்கு எதிராக அமெரிக்க திறைசேரி திணைக்களம நடவடிக்கை எடுத்தது.
அவர்கள் ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூகி, மீதான அரசியல் உந்துதல் வழக்கு விசாரணையில் நெருக்கமாக ஈடுபட்டதாகக் அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளின்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மியன்மார் மக்களுக்கு சர்வதேச சமூகத்தின் வலுவான ஆதரவை நிரூபிக்கவும், ஆட்சிக்கவிழ்ப்பு மற்றும் வன்முறைக்கு பொறுப்புக்கூறலை மேலும் மேம்படுத்தவும் இந்த நடவடிக்கைகளை நாங்கள் ஐக்கிய இராச்சியம் மற்றும் கனடாவுடன் ஒருங்கிணைத்து வருகிறோம்.
மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காணவும், வன்முறையை நிறுத்தவும், அநியாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்கவும், தடையின்றி மனிதாபிமான அணுகலை அனுமதிக்கவும், ஜனநாயகத்திற்கான பர்மாவின் பாதையை மீட்டெடுக்கவும், எங்கள் சர்வதேச பங்காளிகளுடன் அமெரிக்கா தொடர்ந்து பணியாற்றும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைப்போலவே அதே மூன்று பேர் மீதும் கனடா பொருளாதாரத் தடைகளை விதித்தது.
இதுதொடர்பாக கனேடிய அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அவர்கள் சட்டத்தின் ஆட்சியைத் துஷ்பிரயோகம் செய்வதற்கும் அரசியல் எதிர்ப்பை அகற்றுவதற்கும் அந்தந்தப் பாத்திரங்களைப் பயன்படுத்துகின்றனர். இதனால் சர்வதேச அமைதி மற்றும் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமையின் கடுமையான மீறலுக்கு பங்களிக்கின்றனர்.
கடந்த ஆண்டு மியன்மாரில் மனிதாபிமான மற்றும் அரசியல் சூழ்நிலையில் இராணுவம் தலைகீழாக மாறுவதற்கான எந்த அறிகுறியையும் காட்டவில்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பிறகு நாட்டின் தேர்தல் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் திடா ஓ, டின் ஓ மற்றும் மூன்றாவது நபரான யு தெய்ன் சோ ஆகியோருக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக பிரித்தானியா கூறியுள்ளது.
மியன்மாரின் இராணுவ ஆட்சி, மியன்மார் மக்களை பயமுறுத்த முயற்சிக்கிறது என பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘அச்சம் மற்றும் வன்முறை மூலம், அவர்கள் பிளவு மற்றும் மோதலை உருவாக்கியுள்ளனர்’ என அவர் கூறினார்.
இதனிடையே மியன்மாரில் இராணுவ சதி நடந்து ஓராண்டு நிறைவுற்றுள்ள போதும் இதை உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர உலகம் எதுவும் செய்யவில்லை’ என தேசிய ஒற்றுமை அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் ஸின் மார் ஆங் கூறினார்.
ஆட்சிக் கவிழ்ப்பிற்குப் பின்னர் 1,500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் கூறியுள்ளது. இது வன்முறையை தொடக்கத்தில் இருந்து கண்காணித்து வருகிறது.