மன்னார் மாவட்டத்தில் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக மாவட்ட ரீதியாக அனுமதி பெற்றுக் கொள்ளப்படாது ஆய்வு என்ற ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த கனிய மண் அகழ்வு மற்றும் காற்றாலை மின் சக்தி திட்டத்தின் விரிவுபடுத்தலை உடனடியாக நிறுத்தும் விதமாக மன்னார் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மன்னார் நகர் பிரதேச செயலாளர் ம.பிரதீப்பின் நெறிப்படுத்தலில் நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் மன்னார் நகர மண்டபத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் மன்னார் மாவட்டத்தில் கரையோர பகுதிகளில் ஐந்து வருடங்களுக்கு மேலாக கனிய மண் ஆய்வு என்ற போர்வையில் பேசாலை, நடுக்குடா, கட்டுக்காரன் குடியிருப்பு போன்ற பகுதிகளில் நிலத்தின் கீழ் 25 அடி ஆழத்திற்கு துளையிட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த ஆய்வு மற்றும் அகழ்வை உடனடியாக நிறுத்திவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேநேரம் மன்னாரில் கடந்த வருடம் அமைக்கப்பட்ட காற்றாலை மின் உற்பத்தி செயற்திட்டம் காரணமாக மீன்பிடி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்திய நிலையில், மன்னார் மாவட்டத்தில் மேலதிகமாக நிறுவப்பட கலந்தாலோசிக்கப்படும் காற்றாலை செயற்திட்டத்தையும் நிறுத்துவதற்கு அபிவிருத்தி குழுவினால் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் பிரதேச ரீதியாக மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு விடயங்கள் குறித்தும் விரிவாக கவனம் செலுத்தப்பட்டதுடன், கடந்த வருடம் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் எவ்வாறு நடை முறைப்படுத்தப்பட்டுள்ளமை குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
குறித்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், வினோ நோகராதலிங்கம், நகர, பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள், அரச பதவி நிலை உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.