உலகின் முன்னணி எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கிடையிலான முக்கிய கலந்துரையாடல் இன்று(புதன்கிழமை) இடம்பெறவுள்ளது.
மசகு எண்ணெய் விலை ஏழு ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை தொட்டிருக்கும் நிலையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
கொரோனா தொற்று, எண்ணெய் சந்தையில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய நிலையில் வழக்கமான சந்திப்பின் ஓர் அங்கமாகவே பெற்றோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பின் (ஒபெக்) 13 உறுப்பு நாடுகளும் அதன் 10 கூட்டணி நாடுகளு் வீடியோ மாநாடு மூலம் சந்திக்கவுள்ளன.
இதில் எதிர்வரும் மார்ச் மாதத்தில் நாளொன்றுக்கு 400,000 பீப்பாய்களாக உற்பத்தியை தொடர்ந்து அதிகரிக்க தீர்மானிக்கப்படலாம் என அவதானிகள் நம்புகின்றனர்.
கொரோனா தொற்று முதலில் பரவ ஆரம்பித்தபோது எண்ணெய் விலை பெருமளவில் வீழ்ச்சி கண்டதையடுத்து அதன் உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டதோடு கடந்த ஆண்டு மே மாதம் தொடக்கம் படிப்படியாக உற்பத்தி அதிகரிக்கப்பட்டு வருகின்றது.
பிரெண்ட் எண்ணெய் கடந்த புதன்கிழமை பீப்பாய் ஒன்று 90 டொலர்களாக அதிகரித்தது. இது 2014 ஒக்டோபருக்கு பின்னர் பதிவான உச்ச விலையாக இருந்தது.
ரஷ்யா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு இடையே உக்ரைன் விவகாரம் தொடபில் அண்மைக் காலத்தில் ஏற்பட்டிருக்கும் பதற்ற சூழலும் எண்ணெய் விலை அதிகரிப்புக்கு காரணமாக கருதப்படுகிறது.
குறிப்பாக உலகின் இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடாக ரஷ்யா உள்ளமை குறிப்பிடத்தக்கது.