மீனவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டமானது சட்டத்தினை அமுல்படுத்துமாறு கோரும் போராட்டம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்களுக்கு நிரந்தரமான தீர்வு மற்றும் வடமராட்சி கிழக்கு கடலில் இடம்பெற்ற மீனவர்கள் உயிரிழப்புக்கு நீதி ஆகியவற்றை கோரி தொடங்கப்பட்ட போராட்டம் 4வது நாளாக இன்றும் முழு வீச்சுடன் இடம்பெற்று வருகின்றது.
இந்தநிலையில் இன்றைய தினம் பருத்தித்துறை – சுப்பர்மடம் பகுதியில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள மீனவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரனும், இரா.சாணக்கியனும் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதன்போது மீனவர்கள் மத்தியில் கருத்து வெளியிடும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மீனவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டமானது சட்டத்தினை அமுல்படுத்துமாறு கோரும் போராட்டம் எனவும், இது சட்டவிரோதமான போராட்டம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மீனவர்களின் போராட்டத்திற்கு தங்களது ஆதரவு எப்போதும் உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.