உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் நெருங்கிய நட்பு நாடான சீனாவின் ஜனாதிபதி ஸி ஜின்பிங்கை, ரஷ்யா ஜனாதிபதி விளாடிமீர் புடின் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) பெய்ஜிங் நகரில் ஆரம்பமாகிய நிலையில், இதன் தொடக்க விழாவில் கலந்துக் கொள்வதற்காக சீனா சென்ற போதே ரஷ்யா ஜனாதிபதி விளாடிமீர் புடின் இந்த பேச்சுவார்த்தை முன்னெடுத்திருந்தார்.
ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவுக்கு முன்பாக இருநாட்டு தலைவர்களும் பெய்ஜிஙகில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது, உக்ரைன் பிரச்சினை, கொரோனோ தொற்று உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து தலைவர்கள் விவாதித்தனர்.
இந்த சந்திப்புக்கு பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரஷ்யா ஜனாதிபதி விளாடிமீர் புடின், ‘ரஷ்யாவும் சீனாவும் கண்ணியமான உறவுக்கு எடுத்துக்காட்டு. சீனாவுடனான ரஷ்யாவின் உறவுகள் நட்பு மற்றும் மூலோபாய கூட்டாண்மையின் பாதையில் படிப்படியாக வளர்ந்து வருகின்றன, அவை உண்மையிலேயே முன்னோடியில்லாத இயல்புடையவை’ என கூறினார்.
இதனைத்தொடர்ந்து கருத்து தெரிவித்த சீனா ஜனாதிபதி ஸி ஜின்பிங், ‘புடினை நான் நீண்ட காலமாக அறிவேன். நாங்கள் இருவரும் உலகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பல பொதுவான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் நல்ல நண்பர்கள் மற்றும் அரசியல்வாதிகள். நாங்கள் எப்போதும் நெருக்கமான தொடர்பை பேணி வருகிறோம்’ என கூறினார்.
சீன ஜனாதிபதி ஜின்பிங் கடந்த 2 ஆண்டுகளில் வெளிநாட்டு தலைவர் ஒருவருடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்தியது இதுவே முதல் முறையாகும். சீனாவில் கொரோனா பரவ தொடங்கியதற்கு பிறகு ஜின்பிங் நாட்டை விட்டு வெளியே செல்லவில்லை. அதேபோல் எந்த வெளிநாட்டு தலைவரும் சீனா வரவில்லை.