19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் மூன்றாம் இடத்திற்கான போட்டியில், அவுஸ்ரேலிய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
ஆன்டிகுவா மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், அவுஸ்ரேலிய அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, 49.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 201 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, இஜாஸ் அகமது அஹ்மத்ஸாய் 81 ஓட்டங்களையும் சுலிமான் சாஃபி 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், வில்லியம் சால்ஸ்மேன் மற்றும் நிவேதன் ராதாகிருஸ்னன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கூப்பர் கோனோலி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 202 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, 49.1 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், அவுஸ்ரேலிய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, நிவேதன் ராதாகிருஸ்னன் 66 ஓட்டங்களையும் காம்ப்பெல் கெல்லவே 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில், நங்கேயாலியா கரோட் 3 விக்கெட்டுகளையும் ஷாஹிதுல்லா ஹஸனி மற்றும் நூர் அஹமட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 3 விக்கெட்டுகளையும் 66 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்ட அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் நிவேதன் ராதாகிருஸ்னன் தெரிவுசெய்யப்பட்டார்.