அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க முயற்சி எடுத்துள்ளதாக அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கே. மஸ்தான் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ‘நல்லாட்சி காலத்தில் எத்தனை அரசியல் கைதிகளை விடுவித்தார்கள். எனினும் தற்போதைய ஜனாதிபதி பொறுப்பேற்றவுடன் அரசியல் கைதிகளின் விடுதலை இடம்பெற்றுள்ளது.
அது மாத்திரமின்றி அரசியல் நோக்கத்திற்காக கைது செய்யப்பட்ட அனைவரையும் விரைவாக விடுதலை செய்வதற்கான முனைப்பினை சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் ஜனாதிபதியுடன் தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் பேசி தொடர் முயற்சிகளை எடுத்துள்ளோம்.
அத்துடன் உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் அவ்வப்போது விளக்கம் கொடுத்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்யலாம் என்ற முழு நம்பிக்கையில் இருக்கின்றோம்.
இந்தியாவில் இருந்து வரும் மீனவர்கள் எமது மீனவர்கள் பாதிக்கும் வண்ணம் தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றனர். எனவே இரண்டு நாடுகளுக்கிடையில் முரண்பாடு வராத வகையில் ஒரே மொழி பேசும் சமூகம் என்பதனை உணர்ந்து இந்தியாவில் இருந்து வரும் மீனவர்கள் எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தினை பாதிக்காத வகையில் அவர்களது எல்லையில் இருந்து மீன்களை பிடிக்க வேண்டும் என்பதனை ஒரு கோரிக்கையாக வைக்கின்றேன்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.