கச்சதீவு திருவிழாவுக்கு இந்திய பக்தர்கள் செல்வது தொடர்பான கோரிக்கைகளை நாங்கள் உரிய தரப்புகளுக்கு அனுப்பியிருக்கின்றோம். அங்கிருந்து அனுமதி கிடைக்கும் பட்சத்தில் இந்தியாவிலிருந்தும் பக்தர்கள் பங்கேற்க முடியும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
கச்சதீவு திருவிழா தொடர்பில் ஊடகவியாளர் கேள்வி எழுப்பிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,எதிர்வரும் மார்ச் மாதம் 11ஆம் 12ஆம் திகதிகளில் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் நடைபெறவுள்ளது.
இதன் ஆரம்பக்கட்ட கூட்டத்திலேயே சுகாதார நிலைமை மற்றும் கொரோனா நிலைமைகளை கருத்தில் எடுத்து சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனைக்கமைய 500 உள்ளூர் பக்தர்கள் செல்வதற்கு மாத்திரம் அனுமதி கிடைத்திருந்தது.
இருந்தபோதும் தற்போது ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்ற வேளையில் இந்திய பக்தர்களையும் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இந்த கோரிக்கைகளை நாங்கள் உரிய தரப்புகளுக்கு அனுப்பியிருக்கின்றோம். அங்கிருந்து அனுமதி கிடைக்கும் பட்சத்தில் இந்தியாவிலிருந்தும் பக்தர்கள் பங்கேற்க முடியும்.
இவ்வாறான கோரிக்கை குறித்து சுகாதார அமைச்சு மற்றும் கலாசார அமைச்சுக்கு அறிவித்திருக்கின்றோம். அனுமதி கிடைக்கும் பட்சத்தில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும். இவ்விடயத்தில் சில முன்னெடுப்புக்கள் எடுக்கப்படுவதாக அறிய முடிகின்றது என்றார்.