கட்டாய கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு எதிராக கனடாவை தொடர்ந்து நியூசிலாந்திலும் பாராளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தலைநகர் வெலிங்டனில் கூடிய, நூறுக்கும் மேற்பட்ட பாரவூர்திகளுடன் அதன் சாரதிகள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சுமார் 100 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாராளுமன்றத்திற்கு முன்பாக குவிந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எல்லை கடந்து செல்லும் பாரவூர்திகளின் சாரதிகள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என கனடா முன்னதாக அறிவித்திருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கனடாவின் சில பகுதிகளில் தொடர்ந்தும் சாரதிகள் வீதியை மறித்து ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வரும் நிலையில், தற்போது ஏனைய நாடுகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது.
நியூஸிலாந்து, தெதர்லாந்து, அவுஸ்ரேலியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.