அரைக் காற்சட்டையுடன் யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் வந்த மாணவனைக் கண்டித்த சிரேஷ்ட மாணவன் யாழ்.பல்கலைக்கு வெளியில் வைத்துத் தாக்கப்பட்டமை தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த வாரம் யாழ்.பல்கலைக்கழகத்தினுள் கனிஷ்ட மாணவன் ஒருவர், பல்கலைக்கழக மாணவன் அல்லாத தன்னுடைய நண்பர் ஒருவருடன் அரைக் காற்சட்டை அணிந்து பல்கலைக்கழக வளாகத்தினுள் வந்துள்ளார்.
அதனை அவதானித்த மூன்றாம் மற்றும் நான்காம் வருட மாணவர்கள் குறித்த மாணவனை அழைத்து அரைக் காற்சட்டையுடன் பல்கலை வளாகத்தினுள் நுழைந்தமையை கண்டித்து, பல்கலை வளாகத்தினை விட்டு வெளியேறுமாறு பணித்துள்ளனர்.
அதன் போது மாணவனுடன் வந்த பல்கலைக்கழகம் சாராதவர், சிரேஷ்ட மாணவர்களுடன் முரண்பட்டுள்ளார்.
அதனை அடுத்து அங்கு வந்திருந்த பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள், அரைக்காற்சட்டையுடன் பல்கலைக்கழக வளாகத்தினுள் நின்றவர்களை வெளியேற்றி இருந்தனர்.
இச்சம்பவம் இடம்பெற்ற பின்னர், அரைக் காற்சட்டையுடன் வந்த நபர்களைக் கண்டித்த சிரேஷ்ட மாணவர் ஒருவர் கல்லுண்டாய் வெளி ஊடாக தனது நண்பர் ஒருவரின் முச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை, கல்லுண்டாய் வெளியில் முச்சக்கரவண்டியை வழிமறித்த கும்பல் ஒன்று மாணவன் மீது சரமாரியாகத் தாக்குதலை நடாத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக ஒழுக்காற்று குழுவிற்குத் தாக்குதலுக்கு இலக்கான மாணவன் முறையிட்டதை அடுத்து , பல்கலைக்கழகத்திற்கு வெளியே நடைபெற்ற சம்பவம் என்பதனால், அது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டமைக்கு அமைவாக மாணவனால் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.