தோற்கடிக்கவே முடியாது என கூறப்பட்ட புலிகள் அமைப்பையே தோற்கடித்த தலைவர்தான் மஹிந்த ராஜபக்ஷ எனவும், கொரோனா தொற்றிலிருந்து மக்களை காத்தவர்தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எனவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுப் பேரணிகளின் “முதலாவது பொதுஜன பேரணி”ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், அநுராதபுரம் சல்காது மைதானத்தில், இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ரஜரட்ட (அநுராதபுரம்) என்பது எமக்கு என்றும் கை கொடுக்கும் மண். 2015 இல் எமக்கு தோல்வி ஏற்பட்டபோதுகூட ரஜரட்டவில் வெற்றிபெற்றோம். இங்குள்ள மக்கள் போலிகளுக்கு ஏமாறவில்லை.
பிரபாகரனை தோற்கடிக்க முடியாது, புலிகள் அமைப்பு பலம் மிக்கது என அன்று தெரிவித்தனர். ஆனால் அந்த அமைப்புக்கு மூன்றரை வருடங்களில் முடிவுகட்டிய தலைவர்தான் மஹிந்த ராஜபக்ஷ.
நாடு நெருக்கடியான நிலையில் இருக்கும்போதுதான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியை பொறுப்பேற்றார். அதன்பின்னர் கொரோனா தொற்று பரவியது.
எமது ஜனாதிபதி துவண்டுவிடவில்லை. கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதில் தீவிரம் காட்டினார். நாட்டு மக்களின் உயிரை பாதுகாத்தார். எனவே, இவ்விரு தலைவர்களும் உலக வரலாற்றில் இடம்பிடிப்பார்கள்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.