அரச கடன் மற்றும் கடன் சேவைகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொதுக் கணக்குகளுக்கான குழுவிடம் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றம் கூடும் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் இந்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்றம் என்பது மாநில நிதிகளை கட்டுப்படுத்தும் அமைப்பாகும் என்றும் தாங்கள் பலமுறை தகவல்களைக் கோரியுள்ளதாகவும் எனினும் வழங்கப்படவில்லை என்று அவர் கூறினார்.
இலங்கையின் கையிருப்பு ஒரு பில்லியன் டொலருக்கும் கீழ் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
மேலும் நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து இலங்கைப் பிரதிநிதியுடனான சந்திப்பின் பின்னர் சர்வதேச நாணய நிதியம் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கை தொடர்பில் விவாதம் நடத்துமாறு விக்கிரமசிங்க மீண்டும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
சர்வதேச நாணய நிதியம் பின்பற்றும் விதிமுறைகளின்படி, மூன்று வாரங்களில் நடைபெற்ற விவாதங்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கும் என்றும் அதன்படி, மார்ச் மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையின் மீதான விவாதத்தை நடத்த முடியும் என்று சுட்டிக்காட்டிய அவர், எனவே திகதியை திட்டமிடுவது குறித்து அரசாங்கத்திடம் அவர் கோரினார்.
இதனையடுத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது இந்த விடயம் முன்வைக்கப்படும் என அவைத் தலைவரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.














